மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்


மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:45 AM IST (Updated: 27 Feb 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்:

11 மாதங்களுக்கு பிறகு...
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. தற்போது 11 மாதங்களுக்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் விவசாயி ராஜூ பேசுகையில், கை.களத்தூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக திறக்க வேண்டும், என்றார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நீலகண்டன் பேசுகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும், என்றார்.
மனுக்கள் மீது நடவடிக்கை
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை பேசுகையில், பூலாம்பாடி சேமிப்புக் கிடங்கு பணியை துரிதப்படுத்த வேண்டும். அப்பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள கீழவாடி ஏரி மதகை சீரமைக்க வேண்டும். எறையூர் சர்க்கரை ஆலையில் அண்மையில் பழுதான எந்திரத்தால் பல லட்சம் மதிப்பிலான சர்க்கரை பாகுகள் வீணாகியது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க ஆலைகளில் உள்ள எந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும், என்றார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்றார்.
அலட்சியப்படுத்துகின்றனர்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் பேசுகையில், அண்மைக்காலமாக, அரசு அலுவலர்கள் விவசாயிகளை அலட்சியப்படுத்துகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. இவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறை அலுவலகத்தில் நிகழும் குறைபாடுகளை களைய வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி பதாகையாக வைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

Next Story