பெரியபாளையம் அருகே பெண் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு; 2 பேர் கைது


பெரியபாளையம் அருகே பெண் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2021 8:49 PM IST (Updated: 27 Feb 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் திருடியதாக உறவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகனுக்கு சிகிச்சை
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பொள்ளாச்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சசிகுமார். இவரது மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மேலும், மீனாவின் வயதான பெற்றோர் இவர்களது வீட்டில் தங்கி உள்ளனர். இந்நிலையில் சசிக்குமார் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக கணவன், மனைவி இருவரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்து வந்தனர். இதனால் வீட்டில் அவர்களது மகள் மற்றும் பெற்றோர் 
மட்டுமே இருந்து வந்துள்ளனர். இவர்களது உறவினரான ஆரம்பாக்கம் செட்டித்தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வாலிபர் வீட்டில் அவர்களுக்கு துணைக்கு தங்கியிருந்து வந்துள்ளார்.

நகைகள் மாயம்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி மகனின் மருத்துவ தேவைக்காக தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை அடகு வைப்பதற்காக மீனா எடுக்க முயன்ற போது, அதில் இருந்த சங்கிலி, கம்மல், ஜிமிக்கி உள்ளிட்ட 22 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இந்த சம்பவம் குறித்து மீனா வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் உள்ளிட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.இந்நிலையில், போலீசாருக்கு கார்த்திக் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் கைது
அப்போது அவர், மீனா வீட்டில் இருந்த சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், இந்த நகைகளை தனது உறவினரான ஆரம்பாக்கத்தை சேர்ந்த ஜென்டா தெருவில் வசித்து வரும் சாந்தி (45) என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார்.அதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாந்தியை கைது செய்து தங்க நகைகளை மீட்டனர்.மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story