மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள், பதாகைகள் அகற்றம் + "||" + Removal of political party flags and banners

அரசியல் கட்சி கொடிகள், பதாகைகள் அகற்றம்

அரசியல் கட்சி கொடிகள், பதாகைகள் அகற்றம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து அரசியல் கட்சி கொடிகள், பதாகைகள் அகற்றப்பட்டன.
ஊட்டி,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.  அதன்படி 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், பதாகைகள், 48 மணி நேரத்திற்குள் பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம்,

சாலைகளில் உள்ள அரசியல் விளம்பரங்கள், 72 மணி நேரத்திற்குள் வீடுகள் மற்றும் வீடுகளின் சுவர்களில் எழுதப்பட்ட அரசியல் விளம்பரங்களை அகற்ற வேண்டும். இதைத்தொடர்ந்து ஊட்டி நகராட்சியில் சாலையோரம், நகராட்சி சுற்றுசுவர்கள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அரசியல் கட்சிகளின் பதாகைகளை நேற்று பணியாளர்கள் கிழித்து அகற்றினர்.  மேலும் சாலையோர சுவரில் எழுதப்பட்டு இருந்த அரசியல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர், முன்னாள் முதல்-அமைச்சர் படங்கள் அகற்றப்பட்டது.  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படம் மற்றும் சின்னம் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஜெ.ஜெ. நினைவு தூண், சுற்றிலும் வெள்ளை துணி கொண்டு மூடி மறைக்கப்பட்டு உள்ளது. கண்ணாடி மாளிகை முன்பு உள்ள கல்வெட்டு துணியால் மறைக்கப்பட்டது.  ஆனால் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளில் முதல்-அமைச்சர் படம் உள்ளது. அவை நீக்கப்படவில்லை.  மத்திய பஸ் நிலையம், காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கட்சி கொடி கம்பங்களில் கொடிகள் அகற்றப்படாமல் உள்ளது.

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை மறைக்கப்படாமல் இருக்கிறது.
அரசியல் கட்சியினர், வேட்பாளர், தனி நபருக்கு சொந்தமான கட்டிடத்தில் அனுமதி இல்லாமல் கொடி மற்றும் பேனர் கட்டுதல், துண்டு பிரசுரங்கள் ஒட்டுதல், வாசகங்கள் எழுத கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றுவது, சுவர் விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் டானிங்டன் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை மூடப்படாமல் இருந்தது. நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது.