கோவில்பட்டி, கடம்பூர் 2வது ரெயில் பாதையில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு சோதனை


கோவில்பட்டி, கடம்பூர் 2வது ரெயில் பாதையில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு சோதனை
x
தினத்தந்தி 28 Feb 2021 2:41 PM GMT (Updated: 28 Feb 2021 2:41 PM GMT)

கோவில்பட்டி, கடம்பூர் 2வது ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

கோவில்பட்டி:
கோவில்பட்டிகடம்பூர் 2வது ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
2வது ரெயில் பாதை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை ரூ.445 கோடியில் 2வது ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதில் கடம்பூர் முதல் கோவில்பட்டி வரையிலான 2வது ரெயில் பாதை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து,  கடந்த 26ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஏ.கே.ராய், ஆர்.வி.என்.எல். திட்ட இயக்குனர் கமலகரண் ரெட்டி, மதுரை கோட்ட பொது மேலாளர் லெனின் மற்றும் அதிகாரிகள் 2வது ரெயில் பாதையில் 5 ட்ராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
120கி.மீ. வேகம்
இதையடுத்து நேற்று மாலையில் அந்த ரெயில் பாதையில் கோவில்பட்டி முதல் கடம்பூர் வரை அதிவேக ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அதிகவேக ரெயிலுக்கு பூஜைகள் நடந்தன. ரெயில் என்ஜினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ரெயில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்க ரெயில்வே அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இந்த பணிகளில் முழு திருப்தி இருந்தால், பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் கடம்பூர் முதல் கோவில்பட்டி வரையிலான 2வது இருப்பு பாதையில் ரெயில்களை இயக்க அனுமதி அளித்த பின்னர் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story