சிவகங்கை சட்டமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை விடுப்போம்
தி.மு.க.விடம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை விடுப்போம் என்று பூத் கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி,
தி.மு.க.விடம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை விடுப்போம் என்று பூத் கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரம் கூறினார்.
காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம்
காரைக்குடியில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் கல்லல் தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
முன்னாள் தலைவர் ராஜரத்தினம், காங்கிரஸ் துணைத்தலைவர் மாங்குடி, அப்பாவு ராமசாமி, ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் களஞ்சியம், முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம், சுந்தரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது:-
காங்கிரசுக்கு ஒதுக்க...
சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி கட்சியான தி.மு.க.விடம் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை விடுப்போம். நமது கட்சி வெற்றி பெற்றால் போதாது. நமது கூட்டணி கட்சியினர் நிற்கும் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற பாடுபட வேண்டும். அது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.
தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. அரசு என்பது வெற்று பேச்சு அரசாக செயல்பட்டு வருகிறது. தேர்தலை மனதில் கொண்டு தற்போது பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். முதலில் கூட்டுறவு கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என அடுத்தடுத்த கடனை தள்ளுபடி செய்வதாக கூறும் அவர் இதற்காக எவ்வளவு நிதியை வைத்துள்ளார் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகள் 7 மாதம் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது வைகை-குண்டாறு திட்டம் இணைப்பு என தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தில் திட்டத்தை செயல்படுத்த போவதாக கூறியுள்ளார்.
வெற்று பேச்சு அரசு
அந்த 4 ஆண்டு காலத்திற்கு முன்பே இந்த திட்டத்தை தொடங்கியிருந்தால் தற்போது அவை நிறைவு பணியை எட்டியிருக்கும். ஆனால் தற்போது தேர்தலை மனதில் வைத்து பேச ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க. அரசு வெற்று பேச்சு அரசு என தெரிகிறது.
இந்த வெற்று பேச்சு அரசாக உள்ள அ.தி.மு.கவின் தோளில் ஏறிக்கொண்டு வந்து தமிழகத்தில் நுழைந்து விடலாம் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் பா.ஜ.க. என்ற நச்சு செடியை ஒருபோதும் தமிழக மக்கள் தமிழகத்தில் விடமாட்டார்கள் என்பதை அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story