நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் அமல்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடாவை தடுக்க 15 பறக்கும் படை குழுக்களும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதிக்கு 3 பறக்கும்படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் தாசில்தார் அந்தஸ்தில் ஒருவரும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி ஏந்திய 2 போலீசாரும், ஒரு வீடியோகிராபரும் இடம் பெற்றுள்ளனர். ஒரு குழுவில் மொத்தம் 5 பேர் இருப்பர். இவர்கள் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள். சோதனைச் சாவடிகளில் வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே நெல்லை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
பறக்கும் படையினர் ஆய்வு
தேர்தல் விதிப்படி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது. அதற்குமேல் பணம் கொண்டு சென்றால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பறக்கும் படை குழுவினர் வாகனங்களில் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் பறக்கும் படை குழுவினர் நேற்று வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து புளியங்குடிக்கு புறப்பட்டு வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 64 வேட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படை குழுவினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
வாகன சோதனை தீவிரம்
அதேபோல் அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தனர். அதில் எண்ணெய் பாக்கெட்டுகள் இருந்தன. முறையான ஆவணங்கள் இருக்கிறதா? என பறக்கும் படை குழுவினர் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை.
Related Tags :
Next Story