தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்


தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 March 2021 3:41 PM GMT (Updated: 2 March 2021 3:41 PM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போதும்  பிரதமர் நரேந்திரமோடி தமிழில் ஏதாவது ஒன்றை கூறிவிட்டு தமிழ் மொழியை பாராட்டுகிறார். இங்கு வசிக்கும் எங்களுக்கு தெரியாதா, தமிழ் மொழியின் சிறப்பு. திருப்பதிக்கே லட்டு கொடுக்க பார்க்கிறார் அவர். 

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு

எங்கு சென்றாலும் விவசாயிகளை பற்றி பெருமையாக பேசி வரும் பிரதமர் நரேந்திரமோடி  டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது இல்லை. 
 தேர்தலுக்காக முதல் நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்.
அடுத்தநாள் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உறுதியாகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் உள்ளது.  எங்களை பொறுத்தவரையில் உள் ஒதுக்கீடு வழங்கியதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எதற்காக இவ்வளவு அவசரமாக அறிவித்தார்கள் என தெரியவில்லை.

கவலை கிடையாது

 கடந்த மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த முதல்-அமைச்சர், அந்த கணக்கெடுப்பு தொடங்குவதற்கு  முன்னதாகவே உள்ஒதுக்கீடு வழங்கி உள்ளார். 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடி பெற்று தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அடுத்த ஆட்சி வரும் வரை வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வராது, வருகிறதோ இல்லையோ அதை பற்றி இவர்களுக்கு கவலை கிடையாது. இந்த ஒதுக்கீடு வன்னியர்களுக்காக அல்ல. 

சூப்பிரண்டுக்கு பாதுகாப்பு இல்லை

அ.தி.மு.க.-பா.ம.க.விற்கு கூட்டணி கொள்ளை அடிப்பதற்காக தேர்தல் நாடகம் தான் இது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.ஆட்சியில் ஒரு போலீஸ் சூப்பிரண்டுக்கே  பாதுகாப்பு இல்லை யென்றால்  பெண் காவலர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். 
மக்களுக்காக உண்மையாக உழைக்க கூடிய தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் பேராதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story