ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 March 2021 12:05 AM GMT (Updated: 4 March 2021 12:10 AM GMT)

ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் ெகாண்டு சென்ற ரூ.1.90 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,

சட்டமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமம் அருகே கூட்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகராஜன் தலைமையில் அதிகாரிகள், போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

பணம் பறிமுதல்

அப்போது காரில் ஒரு பையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர் கர்நாடக மாநிலம் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த மாருதி பிரசாத் என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஓசூர் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

Next Story