நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரெயில் பாதை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரெயில் பாதை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 4 March 2021 5:21 PM GMT (Updated: 4 March 2021 5:21 PM GMT)

நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரெயில் பாதையை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று ஆய்வு செய்தார்.

நீடாமங்கலம்:-
நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரெயில் பாதையை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று ஆய்வு செய்தார். 
நீடாமங்கலம்-மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்-மன்னார்குடி இடையே அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. 
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி- சென்னை மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ், மன்னார்குடி-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ், மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயில் உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மன்னை எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. 
பணிகள் நிறைவு
இந்த நிலையில் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான 13 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அகல ரெயில் பாதையை மின்மயமாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மின்மயமாக்கும் பணிகள் ரூ.10 கோடி செலவில் நடந்தது. கடந்த 6 மாதங்களாக நடந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. 
மின்மயமாக்கப்பட்ட இந்த வழித்தடத்தை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் இருந்து தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். 
மின்பாதையில் ஆய்வு
ஆய்வுக்கான பிரத்யேக அதிவேக ரெயில் பெட்டியில் சக அதிகாரிகளுடன் பயணம் செய்த அவர் மின் பாதை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மின் வினியோகம் சீராக கிடைக்கிறதா? ரெயில்வே கேட்டுகள் சரிவர உள்ளதா? என்பது பற்றியும் தண்டவாளத்தின் நிலை, ரெயில் நிலைய பராமரிப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு நடந்தது. 
இதனைத்தொடர்ந்து அவர் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். இந்த ஆய்வின் போது தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் ரெயில்வே பொறியாளர்கள் உடன் இருந்தனர். 
மின்சார ரெயில்கள்
ரெயில்களை இயக்க தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒப்புதல் அளித்ததும் மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் செல்லும் பகத்- கீ-கோத்தி எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்களாக இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆய்வு பணியையொட்டி ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். 

Next Story