அரசு பஸ் பழுதானதால் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட மாணவர்கள்


அரசு பஸ் பழுதானதால் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 5 March 2021 12:30 AM IST (Updated: 5 March 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் பழுதானதால் மாணவ, மாணவிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழப்பழுவூர்:

அரசு பஸ் பழுது
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திருமானூர், திருவையாறு, தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். மாலையில் பள்ளி, கல்லூரி முடியும் நேரத்தில் ஏலாக்குறிச்சி பகுதிக்கு செல்ல ஒரே ஒரு பஸ் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பஸ் பழுதின் காரணமாக, கடந்த 2 நாட்களாக வரவில்லை. இதனால் நேற்று மாலை மாற்று அரசு பஸ், போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி பகுதிக்கு பிரியும் சாலை அருகே அந்த பஸ் வந்தபோது, திடீரென பழுதாகி நின்றது. இதனால் கண்டக்டர்கள், அதற்கு மேல் அந்த பஸ் செல்லாது என்று கூறியதையடுத்து, அனைத்து மாணவ, மாணவிகளையும் பஸ்சில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.
கோரிக்கை
வேறு பஸ் இல்லாத நிலையில், அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டிய நிலையில், மாணவர்கள் நடக்கத் தொடங்கினர். இதனால் அவர்கள் அவதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார், அரசு போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக மாற்று பஸ்சை வரவழைத்தனர். அந்த பஸ்சில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றப்பட்டு, அவரவர் கிராமங்களில் இறக்கி விடப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மாணவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு பள்ளி விடும் வேளையில் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் பழுதானால் எங்களுக்கு வேறு மாற்று பஸ் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story