திருவிழா நடத்த அனுமதிக்கக் கோரி தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் உள்ளிருப்பு போராட்டம்


திருவிழா நடத்த அனுமதிக்கக் கோரி  தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 5:32 PM GMT (Updated: 5 March 2021 5:32 PM GMT)

தாராபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்
தாராபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாரியம்மன் கோவில்
தாராபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத திருவிழா 30  நாட்கள்  கோலமாக நடைபெறும்.  திருவிழா தொடங்கியதும், கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனித நீர் ஊற்றி அனைவரும் வழிபடுவர். இந்த நிலையில் கடந்த ஆண்டு திருவிழா கொரோனா பரவலால் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு திருவிழாவை முழுமையாக நடத்த வேண்டும் அல்லது 3 நாட்களாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாரியம்மன் கோவில் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சப்-கலெக்டரிடம் மனு
தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடம், இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;-
தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஆண்டு கொரோனாவால் கொண்டாடப் படவில்லை. மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பூச் சாட்டுதலுடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறும். தினசரி கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். பெண்கள் கோவில் கும்பம் முன்புள்ள கம்பத்திற்கு காலை மாலை இரு வேளையிலும் தீர்த்தம் செலுத்துவார்கள் இந்த ஆண்டு  ஒரே நாளில் மட்டும் கோவில் திருவிழாவை நடத்த அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் வழக்கம்போல் கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கூறுகையில் “தாராபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு அறநிலைய துறையினர், மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்து முன்னணி சார்பில் மாவட்டம் தழுவிய போராட்டம் நடைபெறும்” என்றனர்.

Next Story