தேர்தல் அலுவலர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்


தேர்தல் அலுவலர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி  கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 March 2021 8:41 PM GMT (Updated: 12 March 2021 8:41 PM GMT)

தேர்தல் அலுவலர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணியை, கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி:
தேர்தல் அலுவலர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணியை, கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

சுழற்சி முறையில் தேர்வு

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, சங்கரன்கோவில் (தனி), கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாளர்களாக 9,043 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி தென்காசி ரெயில் நகரில் அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சமீரன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இதனை தொடங்கி வைத்தார்.

பயிற்சி வகுப்புகள்

5 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தென்காசி தொகுதிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும், சங்கரன்கோவில் தொகுதிக்கு சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அத்தியூத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி மற்றும் மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது.

மேற்படி பயிற்சி வகுப்புக்கான ஆணை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மூலம் அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புக்கான ஆணை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story