பவானிசாகா் அணை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை


பவானிசாகா் அணை பகுதியில் சுற்றித்திரியும்  ஒற்றை யானை
x
தினத்தந்தி 15 March 2021 9:52 PM GMT (Updated: 15 March 2021 9:52 PM GMT)

பவானிசாகர் அணை பகுதியில் ஒற்றை யானை சுற்றி திாிகிறது.

பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. பவானிசாகர் வனச்சரகத்தில் வசிக்கும் யானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தேடி பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழத்தோட்ட பகுதிக்கு வந்து நின்றது. அதன்பின்னர் அணையின் கரையின் மீது மெதுவாக ஏறி அப்பகுதியில் வளர்ந்துள்ள புற்களை தனது துதிக்கையால் பறித்து தீவனமாக உட்கொண்டது. வெகுநேரமாக ஒற்றை யானை பவானிசாகர் அணை பகுதியிலேயே முகாமிட்டிருந்தது. இதனால் பணியில் இருந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘பகல் நேரங்களிலேயே காட்டுயானைகள் அணை பகுதியில் முகாமிட்டு வருகிறது. இதனால் தங்களின் வழக்கமான பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்று யானைகள் அணையின் மேல் பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story