திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 19 March 2021 4:49 AM GMT (Updated: 19 March 2021 4:49 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவள்ளூர், 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்து வருகிறது. திருவள்ளூரில் 2 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்காக தே.மு.தி.க. சார்பில் டில்லியும், மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரவணனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் உஷா உள்பட 11 பேர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதியில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன், அ.ம.மு.க. சார்பில் பொன்ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசிங்குராஜன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மகேஸ்வரி உட்பட 7 பேர் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி ஆர்.டி.ஓ.வுமான செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருத்தணியில் சுயேச்சைகள் உள்ளிட்ட 4 பேர் திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சத்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பூந்தமல்லியில் ஏழுமலை (அ.ம.மு.க.) உள்ளிட்ட 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆவடியில் உதயகுமார் (மக்கள் நீதி மய்யம்), சுயேச்சைகள் உள்ளிட்ட 10 பேர் ஆவடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தனர்.

மதுரவாயலில் சுயேச்சைகள் உள்ளிட்ட 12 பேர், அம்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜோசப் சாமுவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பு தென்னரசன் ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்தார். அதில் சில மாற்றங்கள் இருந்ததால் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்தார். இவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கர், அ.ம.மு.க. சார்பில் சவுந்திரபாண்டியன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் ஆண்டு வருமானம் தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் அவர் சார்பில் அவரது வக்கீல்கள் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாதவரத்தில் 7 பேர் மனுதாக்கல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 181 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story