பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை: கொரோனா தடுப்பு விதிமுறை மீறிய 707 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்


பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை: கொரோனா தடுப்பு விதிமுறை மீறிய 707 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 19 March 2021 10:34 PM GMT (Updated: 19 March 2021 10:34 PM GMT)

பல்வேறு இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய 707 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
பல்வேறு இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொேரானா தடுப்பு விதிமுறையை மீறிய 707 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா
கொரோனா தடுப்பு விதிமுறை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என சோதனை செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்தியூர் பகுதியில் போக்குவரத்து போலீசார், போலீசார், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஆகியோர் அந்தியூர் பர்கூர் ரோடு, அந்தியூர் பஸ் நிலையம் அருகே, அண்ணா மடுவு, சந்தியபாளையம் பிரிவு, ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.
400 பேருக்கு அபராதம்
இதில் முக கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 200 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 100 பேருக்கு தலா ரூ.50-ம், வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்களுடன் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு தலா ரூ.100-ம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதவிர கோவிலில், அரசு அலுவலகங்களில் எச்சில் துப்பியதாக 100 பேருக்கு தலா ரூ.50-ம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் மற்றும் சத்தி கோவை நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாக கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். இதில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி, முக கவசம் அணியாத 102 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர்.
மேலும் வாக்குச்சாவடிக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தார்.
பெருந்துறை
பெருந்துறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் இணைந்து பெருந்துறை ஈரோடு ரோடு சந்திப்பு, சென்னிமலை ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தினர்.
இதில் அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இனி வரும் நாட்களில் இந்த சோதனை தீவிரப்படுத்தப்படும்’ என்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக 707 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story