குமரலிங்கம் பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் சுகாதார வளாகம்


குமரலிங்கம் பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் சுகாதார வளாகம்
x
தினத்தந்தி 21 March 2021 6:02 PM GMT (Updated: 21 March 2021 6:02 PM GMT)

குமரலிங்கம் பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் சுகாதார வளாகம்

போடிப்பட்டி, 
குமரலிங்கம் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.10 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் குறுகிய காலத்திலேயே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 
இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இதே பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் செலவில் சிறிய அளவில் சமுதாயக் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் அதுவும் பயன்படுத்தப்படாமல் இந்த பகுதியைச்சுற்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ளது.மேலும் இந்த பகுதியில் இறைச்சிக்கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுவதால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அத்துடன் இந்த பகுதியில் பல்வேறு சமூக விரோதச்செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியைச்சுற்றி புதர் மண்டிக்கிடப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டமும் உள்ளது. எனவே இந்த பகுதியைச்சுத்தம் செய்யவும் சுகாதார வளாகங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதையும், சமூக விரோத செயல்களைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும் என்று பொதுமக்கள் கூறினர்.

Next Story