குடவாசல் ஒன்றியத்தில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு; பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
குடவாசல் ஒன்றியத்தில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் காமராஜ் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் காங்கேயநகரம், மேலப்பாலையூர், திருக்குடி, மணபறவை, மஞ்சக்குடி, நரசிங்கம்பேட்டை, அன்னவாசல், சேங்காலிபுரம், புதுக்குடி, சிமிழி, பெரும்பண்ணையூர், செம்மங்குடி, நெய்குப்பை, நெடுஞ்சேரி, நாரணமங்கலம், திருவிடைச்சேரி ஆகிய இடங்களில் அமைச்சர் காமராஜ் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தார். காங்கேயநகரத்தில் வாக்குசேகரித்த அமைச்சர் காமராஜூக்கு திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பள்ளி மாணவி அமைச்சர் காமராஜூக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதேபோல் வழிநெடுகிலும் பெண்கள் திரண்டு நின்று ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர்.
தொடர்ந்து ஆதரவு
காங்கேயநகரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட காமராஜ் பேசியதாவது:-
நன்னிலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எனக்கு தொடர்ந்து இப்பகுதி மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். கடந்த 2 முறை எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்தீர்கள். தொடர்ந்து 10 ஆண்டுகளாக பல்வேறு முறை இப்பகுதிக்கு வருகை தந்து தேவைகளை எல்லாம் நேரடியாக கேட்டறிந்து நிறைவேற்றிக்கொடுத்துள்ளேன். இதேபோல் அடுத்த 5 ஆண்டுகளும் உங்களுடைய கோரிக்கைகளை தீர்க்கக்கூடிய வாய்ப்பினை அளித்திட வேண்டுகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது இப்பகுதியில் உள்ள சர்வமத ஆலயங்களில் வழிபாடு நடத்தி என் உயிரை நீங்கள் மீட்டு
தந்தீர்கள். என்னுடைய கடைசி காலம் வரை உங்களுக்காக ஓடி வந்து பணியாற்ற கூடியவனாக இருப்பேன்.
சான்று வழங்கப்படும்
என் உயிரை மீட்டு கொடுத்த நன்னிலம் தொகுதி மக்களுக்கு கடைசி வரை நன்றி உடையவனாக இருப்பேன். தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் உங்கள் வீடு தேடி வந்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் வாஷிங் மெஷின், பெண்களுக்கு மாதம் ரூ.1,500. ஆண்டிற்கு விலையில்லாத 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். அதுபோல் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கடன் இல்லை என்ற சான்று வழங்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு உடனடியாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இல்லை என்ற சான்று வழங்கப்படும். இந்த நல்ல
திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story