அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மக்களை பற்றி கவலை இல்லை என்று விஜயபிரபாகரன் பேச்சு


அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மக்களை பற்றி கவலை இல்லை என்று விஜயபிரபாகரன் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2021 1:39 AM IST (Updated: 26 March 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மக்களை பற்றி கவலை இல்லை என்று விஜயபிரபாகரன் பேசினார்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளராக ராமசாமி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நேற்று இரவு நிலக்கோட்டையில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் குரல் சட்டசபையில் எதிரொலிக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு ஊழல் பற்றி ஒருவருக்கொருவர் குறை கூறி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. வருகிற தேர்தலில் அ.ம.மு.க., தே.மு.தி.க.விற்கு ஆதரவு தந்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களித்து ராமசாமியை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விஜயபிரபாகரன் பேசும்போது, நிலக்கோட்டை தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சிவக்குமாருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். அப்போது அங்கிருந்த கட்சியினர் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் ராமசாமி என கூச்சல் போட்டார்கள். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட விஜயபிரபாகரன் கட்சியினரை பார்த்து நீங்கள் சரியாக இருக்கிறீர்களா? என சோதித்து பார்த்தேன் என சமாளித்தார். கூட்டத்தில், இளைஞர் ஒருவர் விஜய பிரபாகரனின் பிரசார வாகனத்தை மறித்தார். அவரை தே.மு.தி.க.வினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story