அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட்டனர்
கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்களை போட்டனர்.
கோவை,
தேர்தல் பணி புரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு விண்ணப்பங்கள் கடந்த 14-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 22-ந் தேதி இறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கோவையில் உள்ள மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சிங்காநல்லூர் ஆகிய 10 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தபால் ஓட்டுக்கான ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டது.
இந்த பணி நிறைவடைந்ததும் நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தல் பயிற்சியின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து பயிற்சி நடைபெற்ற கட்டிடத்தில் தபால் ஓட்டு போடுவதற்காக தனி அறை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
கோவை தெற்கு தொகுதி தேர்தல் பணியாளர்களுக்கு நிர்மலா கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு தபால் ஓட்டு போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அறைக்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
தபால் ஓட்டு போடுவதற்காக வாக்குச்சாவடியில் உள்ளது போல் அட்டைகளால் 3 மறைவிடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் சின்னத்தில் முத்திரை பதித்தனர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தபால் ஓட்டுக்களை போட்டனர். முன்னதாக அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் தபால் ஓட்டு போடப்பட்ட பெட்டி திறந்து காண்பிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தினர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் 22,156 பணியாளர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் தபால் ஓட்டு செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் தவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லும் வாகனங்களின் டிரைவர்கள், தேர்தல் அதிகாரிகளின் வாகன டிரைவர்கள், தேர்தல் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் படை வீரர்கள், தேசிய மாணவர் படையினர் என மாவட்டத்தில் மொத்தம் 35 ஆயிரம் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் தங்களது தபால் ஓட்டுகளை வாக்குப்பதிவு அன்று காலை வரை செலுத்த காலஅவகாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story