கொரோனா பாதிப்பின்போது வழங்கவேண்டிய ரூ.4 ஆயிரம் தொகை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும்; மு.க.ஸ்டாலின் உறுதி


கொரோனா பாதிப்பின்போது வழங்கவேண்டிய ரூ.4 ஆயிரம் தொகை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும்; மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 27 March 2021 2:22 AM IST (Updated: 27 March 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பின் போது வழங்க வேண்டிய ரூ.4 ஆயிரம் தொகை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

ஈரோடு
கொரோனா பாதிப்பின் போது வழங்க வேண்டிய ரூ.4 ஆயிரம் தொகை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
505 வாக்குறுதிகள்
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை மற்றும் குமாரபாளையம் தொகுதி தி.மு.க. மற்றும் காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்களுக்கு உதய சூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்கு சேகரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
1957-ம் ஆண்டு முதல் தி.மு.க. ஒவ்வொரு தேர்தலின்போதும் நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கை வழங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறோம். அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கலந்து ஆலோசித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். வழக்கமாக தேர்தல் அறிக்கை குறித்து கலைஞர் தலைப்பு செய்திபோன்று, 2 வரி குறள் போன்று, சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று கூறுவார். அதையே நானும் கூறுகிறேன். தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 உறுதிமொழிகள் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு உள்ளன.
மானியம்
நெசவாளர் நலன்காக்க தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். அடையாள அட்டைகள் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க அரசே நூல் கொள்முதல் நிலையம் அமைக்கும். தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். வீடுகள் கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். நகர்ப்புற நெசவாளர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும்.
விலைவாசியை கட்டுப்படுத்த பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும். கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில், சட்டமன்றத்தில் அதுபற்றிய ஏற்பாடுகள் குறித்து கேட்டேன். புத்திசாலியான முதல்-அமைச்சர் பழனிசாமி, அம்மாவின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொரோனா வராது என்று பேசினார். உயிருக்கு ஆபத்தான, மருந்து கண்டுபிடிக்கப்படாத, எங்கிருந்து வருகிறது, எப்படி பரவுகிறது என்று தெரியாத நிலையில் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று சட்டமன்றத்தில் கேட்டேன். அதற்கு முதல்-அமைச்சர் ஒரு உயிர் கூட அம்மாவின் ஆட்சியில் போகாது என்றார்.
ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்
எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன், சட்டமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்ய கேட்டுக்கொண்டார். ஆனால், கொரோனா வயதானவர்களுக்கு வரும், நோயாளிகளுக்குதான் வரும் என்று முதல்-அமைச்சர் பதில் அளித்தார். அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான முக கவசங்கள் வழங்க வேண்டும் என்று துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அடுத்தநாள் முதல்-அமைச்சர் பழனிசாமி மட்டும் முககவசம் அணிந்து வந்து உட்கார்ந்து கொண்டார். கொரோனா பற்றி சட்டசபையில் பேசும்போது, நீங்கள் டாக்டரா என்று கேட்டு கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார். அதற்கு மேல் அங்கு பேசி பயன் இல்லை என்று புரிந்து, எதிர்க்கட்சி கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தினேன். அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அப்போது நிதி கிடையாது என்று அறிவித்தார்கள். பின்னர் ரூ.1000 வழங்கினார்கள். நாங்கள் கோரிக்கை வைத்தபடி தமிழக அரசு ரூ.4 ஆயிரம் இன்னும் தரவேண்டியது உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த மீதம் ரூ.4 ஆயிரத்தை வழங்குவோம். மே 2-ந் தேதி தி.மு.க. ஆட்சிக்கு வரும். ஜூன் 3-ந் தேதி கலைஞர் பிறந்தநாளில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
நகைக்கடன்
இதுமட்டுமின்றி மகளிர் உள்ளூர் டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் மகளிர் குழுவினரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 5 பவுன் நகைக்கடன் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். இந்த வாக்குறுதியை நாடாளுமன்ற தேர்தலின்போதும் நாங்கள் கொடுத்து இருந்தோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. அதில் அதிக இடங்களில் நாம் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் 39-க்கு 38 இடங்களில் வெற்றி பெற்றோம். ஆட்சி நம்மிடம் இல்லாததால் அப்போது செய்ய முடியவில்லை. நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக இருக்கும் நம்மைப்பார்த்து, நீங்கள் பெற்றது பெரிய வெற்றி அல்ல என்கிறார்கள். பொய்சொல்லி ஏமாற்றி வென்றோமாம். மக்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டோமாம். மக்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்.
தொழிலாளர் நலவாரியம்
தேர்தல் அறிவித்த பிறகு நடந்த கடைசி கூட்டத்தில் பல திட்டங்களை அறிவித்தார்கள். அதுதான் அவர்களின் கடைசி கூட்டம். இனி சட்டமன்றத்துக்கு வர முடியாது. அந்த கூட்டத்தில் அவர்கள் அறிவித்ததை நினைத்தால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அருணாசலம் பட வசனம் நினைவுக்கு வருகிறது. ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான் என்று அவர் கூறுவார். இங்கு இந்த ஸ்டாலின் சொல்றான்... பழனிசாமி செய்றார்...
சரி நான் மிட்டாய் கொடுத்தேன் என்று கூறுகிறீர்கள். அப்போது நீங்கள் கடைசி நேரத்தில் அல்வா கொடுத்து ஏமாற்றுகிறீர்களா?. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை, விவசாய விளைநிலங்கள் வழியாக போடப்பட்ட உயர் மின்கோபுரங்களுக்கு இழப்பீடு, உரிய வாடகை வழங்கப்படும். கெயில், ஐ.டி.பி.எல். குழாய்கள் சாலை வழியாக போடப்படும். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
7 உறுதிமொழிகள்
ஈரேட்டில் அரசு பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, வேளாண்கல்லூரி, ஜவுளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். மஞ்சள் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். நவீன தொழில் பூங்கா, வேளாண் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில்மையம் அமைக்கப்படும். பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படும். ஈரோட்டில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படும். மொடக்குறிச்சியில் தொழில்பேட்டை கொண்டு வரப்படும். பெருந்துறை சிப்காட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையுடன் இணைந்து போராடிய பொல்லானுக்கு ஜெயராமபுரத்திலும், வல்வில் ஓரிக்கு கொல்லிமலையிலும் மணிமண்டபங்கள் கட்டப்படும். குமாரபாளையத்தில் நீர்பாசன திட்டம் கொண்டு வரப்படும். சாயக்கழிவுகளை அகற்ற திட்டம் கொண்டு வரப்படும்.
வருகிற 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் நம்மிடம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறோம். அந்த தமிழகத்தை மீட்டு முன்னுக்கு கொண்டு வரவேண்டும். இதற்காக திருச்சியில் கடந்த 7-ந் தேதி ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் 10 ஆண்டு தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதச்சார்பற்ற கூட்டணி
தமிழகத்தை மீட்க உங்கள் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு உங்களிடம் வந்திருக்கிறேன். அவர்களுக்கு இந்த தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களாக வர வாக்கு கேட்டு இருக்கிறேன். இப்போது எனக்காக உங்களிடம் வாக்கு கேட்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினர் ஆக கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வேண்டும். அதை நாளை (அதாவது இன்று) கேட்க இருக்கிறேன்.
ஆனால், தமிழக மக்களின் முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்கள் முன் எனக்கு வாக்கு கேட்கிறேன். நான் வெற்றி பெற வேண்டும் என்றால் இங்கே நீங்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தலைவர் கலைஞர் தமிழக மக்களை உடன் பிறப்பே என்று அழைப்பார். தமிழர்களின் தன்மானம் காக்கப்பட, சுயமரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண்ணில் மத கலாசாரத்தை, இந்தி திணிப்பை, சமஸ்கிருத திணிப்பை, நீட் தேர்வை கொண்டு வந்து மத துவேசத்தை விதைக்கும் மோடி மஸ்தான் வேலை தமிழ்நாட்டில் பலிக்காது. உடன் பிறப்பே தமிழர்கள் இணைந்து மாநில உரிமையை பாதுகாப்போம். தமிழகத்தை மீட்போம் வா.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story