தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்யக்கோரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உருவப்பொம்மை எரிப்பால் பரபரப்பு
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஆத்தூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய தாயாரை அவதூறாக பேசியதாக கூறி, தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்யக்கோரி சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவப்பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய தாயாரை அவதூறாக பேசியதாக கூறி, தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் சசி ரேகா, ஆத்தூர் நகர செயலாளர் மோகன் ஆகியோர் கண்டனம் ெதரிவித்து பேசினார்கள். இதில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசும்போது, ‘தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தெய்வமாக வணங்கப்பட வேண்டியவர். அவரை அவதூறாக பேசியதுடன், தமிழக முதல்-அமைச்சரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் ஆ.ராசா எம்.பி.யை கைது செய்ய வேண்டும். தொடர்ந்து பெண்ணினத்தை தரக்குறைவாக பேசிவரும் தி.மு.க.வினரையும், இதனை கண்டிக்காத மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய வேண்டும். தி.மு.க. என்ற இயக்கத்தை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வில் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதனால் தி.மு.க.வினரின் அராஜக போக்கையும், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையும், அ.தி.மு.க.வினர் வீடு,வீடாகச் சென்று பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். ஆ.ராசாவை கைது செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும்’ என்றார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், ஆ.ராசா எம்.பி.யின் உருவப்பொம்மையை எரித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
பனமரத்துப்பட்டி
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய தாயார் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று சேலம் சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாலசந்திரன், நகர செயலாளர் சின்னதம்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பனமரத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் திரண்டனர்.
அங்கு அவர்கள் ஆ.ராசாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், மிதித்தும் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் ஆ. ராசாவின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேஷ், அவைத்தலைவர் சஞ்சீவி, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கீரிப்பட்டி
இதேபோல், தமிழக முதல்-அமைச்சரையும், அவரது தாயாரையும் அவதூறாக பேசியதாக கூறி, தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசாவை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கீரிப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.ரஞ்சித்குமார், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்னாம்மாள் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, ஆ.ராசாவின் உருவப்பொம்மையை எரித்து, செருப்பால் அடித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
பண்ணப்பட்டி
இதேபோல் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ராசா எம்.பி. பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, பண்ணப்பட்டி ஊராட்சி அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அ.தி.மு.க.வினர் பண்ணப்பட்டி பிரிவு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், ஆ.ராசா எம்.பி.யின் உருவப்படத்தை செருப்பால் அடித்ததுடன், உருவப்பொம்மையையும் எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story