எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை


எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 1 April 2021 1:47 AM IST (Updated: 1 April 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 பொதுத்தேர்வு ரத்து 
தமிழக பள்ளி கல்வித்துறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி வருகிறது.
இந் த நிலையில் கொரோனா  பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வுவினை ரத்து செய்து உத்தரவிட்டது. மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
 வலியுறுத்தல்
 இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
 ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போதும் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்கள் முக்கிய பங்கு வகிப்பதால் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட வேண்டுமென கல்வியாளர்களும் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் நடைபெறும் பருவதேர்வுகள், வருகைப்பதிவு, வகுப்பறை செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது.
நேரடி வகுப்பு 
 இந்நிலையில் மீண்டும் நோய் பரவல் அதிகரித்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
 தற்போதுள்ள நிலையில் பிளஸ்-2 மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டாலும் இறுதி மதிப்பெண் சான்றிதழ் வழங்க மதிப்பெண்ணை கணக்கிடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இணைய வழி 
 மாணவர்களின் உயர்கல்விக்கு இந்த மதிப்பெண் அவசியம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு பாடங்கள் மற்றும் தேர்வுகளை இணைய வழி மூலமாக நடத்தி முடித்துள்ளனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு 9-ம் வகுப்பில் ஆண்டு இறுதி தேர்வு நடத்த முடியாததால் காலாண்டு, அரையாண்டு மட்டும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. அதே மதிப்பெண்ணை மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இறுதி முடிவு 
 இது தொடர்பாக கல்வியாளர் குழுவிடம் ஆலோசனை நடத்தி அந்த குழுவின் பரிந்துரைப்படி அரசின் ஒப்புதல் பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும்.
 இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். 

Next Story