என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி


என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி
x
தினத்தந்தி 3 April 2021 1:59 AM GMT (Updated: 3 April 2021 1:59 AM GMT)

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி

வில்லியனூர்,
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது ரங்கசாமி கூறினார்.

ரங்கசாமி பிரசாரம்
புதுவை சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று மங்கலம் தொகுதியில் வேட்பாளர் தேனீ. ஜெயக்குமாருக்கு ஆதரவாக லூர்து நகரில் பிரசாரத்தை ரங்கசாமி பிரசாரம் தொடங்கினார். திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு கேட்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கணுவாப்பேட்டை, புது நகர், கோட்டைமேடு, உறுவையாறு, மங்கலம், கீழூர், சிவராந்தகம், பெருங்களூர், நத்தமேடு, திருக்காஞ்சி, அக்ரஹாரம், வடமங்கலம், கண்ணகி நகர் ஆகிய பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். அப்போது ரங்கசாமி பேசியதாவது:-

இலவச அரிசி வழங்கவில்லை
கடந்த 2016 தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. முக்கியமாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்கள். அதிகபட்சம் ஊருக்கு ஒருவருக்கு வேலை கொடுத்தார்களா? இல்லை. தொகுதிக்கு ஒருவருக்கு வேலை கொடுத்தார்களா? இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் இலவச அரிசியை கூட போட முடியவில்லை. ஆனால் மீண்டும் அதே தேர்தல் வாக்கு றுதியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வாக்கு சேகரிக்க வருகிறார்கள்.

12,000 காலி பணியிடங்கள்
அரசு துறைகளில் 12,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை அவர்களால் நிரப்ப முடியாது. சம்பளம் கூட வழங்க முடியாத அரசுதான் காங்கிரஸ் அரசு. அதிகார போட்டியில் கவர்னருடன் சண்டைபோட்டே காலத்தை கடத்திவிட்டனர்.

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும். என்னுடைய கடந்த ஆட்சியில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கினேன். இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில பிரதிநிதி செல்வம், முன்னாள் வாரியத் தலைவி ரேவதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story