வாக்காளர் சீட்டுகளை வீடுகளுக்கு சென்று நேரில் வழங்கிய கலெக்டர்


வாக்காளர் சீட்டுகளை வீடுகளுக்கு சென்று நேரில் வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 3 April 2021 4:20 PM GMT (Updated: 3 April 2021 4:20 PM GMT)

ராமநாதபுரத்தில் வாக்காளர் சீட்டுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் வழங்கினார்

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் வாக்காளர் சீட்டுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் வழங்கினார். 
வாக்காளர் சீட்டு
ராமநாதபுரம் மாவட்டம், குயவன்குடி மற்றும் பெருங்குளம் ஆகிய கிராம பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் சீட்டுகளை வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- 
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6-ந்தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5,79,908 ஆண் வாக்காளர்கள், 5,85,189 பெண் வாக்காளர்கள், 63 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,65,160 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வரும்போது இந்த வாக்காளர் சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும்.
அடையாள அட்டை
தவிர்க்க முடியாத காரணங்களினால் வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவர இயலாதபட்சத்தில் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பணியாளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகங்கள், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம். 
இவ்வாறு அவர் கலெக்டர் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சோதனை சாவடிகளில் தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story