ஆத்தூர் தொகுதி முழுவதும் 'காவிரி தண்ணீர் தினமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' இ.பெரியசாமி உறுதி


ஆத்தூர் தொகுதி முழுவதும் காவிரி தண்ணீர் தினமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இ.பெரியசாமி உறுதி
x
தினத்தந்தி 4 April 2021 1:30 AM GMT (Updated: 4 April 2021 1:30 AM GMT)

ஆத்தூர் தொகுதி முழுவதும் காவிரி தண்ணீர் தினமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி அளித்துள்ளார்.

கன்னிவாடி, 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

தன்னை வரவேற்க திரண்டிருந்த மக்கள் மத்தியில் இ.பெரியசாமி பேசியதாவது:

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அருமையான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும். குறிப்பாக அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலையை 150 நாட்களாக அதிகரித்து, தினமும் ரூ.300 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமும் காவிரி தண்ணீர்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 வீடு தேடி வழங்கப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு விட்டது. 
ஆனால் அதற்கு பதிலாக தங்களுக்கு சாதகமான ஊர்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விட்டனர். இதனால் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகள் மட்டுமின்றி, ஆத்தூர் தொகுதி முழுவதும் தினமும் காவிரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். படித்த இளைஞர், இளம்பெண்களுக்கு அரசு வேலை வாங்கி தருவேன்.

படித்த இளைஞர்களுக்கு வேலை

காலியாக உள்ள 3Ñ லட்சம் அரசு பணியிடங்களுக்கு நம் பகுதி மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை கிடைத்திட செய்வேன். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4,500 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளேன். பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

பஸ்களில் இலவச பயணம்

தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அனைத்து கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். அனைத்து டவுன் பஸ்களிலும் பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பயணம் செய்யலாம். மலைக்கிராம மக்களும் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களினால் விவசாயிகள் நசுக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால் இலவச மின்சாரத்தை ரத்து செய்து விடுவார்கள்.ரேஷன் கடைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். எனவே  வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு இ.பெரியசாமி பேசினார். 

ஆதரவு தெரிவித்தனர்...

முன்னதாக மக்கள் சமூகநீதி பேரவை மாநில அமைப்பாளர் கருப்புசாமி,மாநில பொருளாளர் சுமதி,மாவட்ட செயலாளர் வேல்முருகன்    ஆகியோர் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் இ.பெரியசாமி யை  சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் ஸ்ரீமுனியாண்டி அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.

பிரசாரத்தின்போது குட்டப்பட்டி இளங்கோ என்ற பிரிட்டோ, பாலம் பாண்டி, செந்தில்குமார், வக்கீல் ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, கூட்டாத்துப்பட்டி நாட்டாமை சந்தானம், குட்டத்துப்பட்டி    ஊராட்சி மன்ற தலைவர்   வேல்கனி சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story