ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீதி உலா


ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீதி உலா
x
தினத்தந்தி 5 April 2021 8:07 PM GMT (Updated: 2021-04-06T01:37:58+05:30)

பெரம்பலூரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தேரோட்டம் நடந்தது. 31-ந்தேதி காலை மட்டையடி, இரவில் ஊஞ்சல் உற்சவம், கடந்த 1-ந்தேதி காலை மஞ்சள்நீர், இரவு விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து திருத்தேர் 8-ம் நாள் திருவிழாவையொட்டி செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் பெருமாள் திருமஞ்சனம் மற்றும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரத்தை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் மற்றும் திருவிக்ரமன் பட்டாச்சாரியார் செய்தனர்.
இரவில் உற்சவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனம் போன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் மகாஜன சங்க பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story