ஈரோடு மாவட்டத்தில் 2,741 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


ஈரோடு மாவட்டத்தில் 2,741 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 5 April 2021 11:29 PM GMT (Updated: 5 April 2021 11:29 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 128 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
சட்டமன்ற தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வி.வி.பேட் கருவிகள் ஆகியன வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடந்தன.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களும், தேர்தலில் பயன்படுத்தப்படும் 20 வகையான பொருட்களும் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்களை தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதற்காக ஏற்கனவே தேர்தல் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பணியை ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆர்.டி.ஓ. சைபுதீன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கட்டுப்பாட்டு கருவிகள்
இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளரும், கிழக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியுமான இளங்கோவன் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்தம் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 454 வாக்குப்பதிவு எந்திரங்களும், 3 ஆயிரத்து 592 வி.வி.பேட் கருவிகளும், 3 ஆயிரத்து 264 கட்டுப்பாட்டு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story