நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது- மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.


நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது- மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
x
தினத்தந்தி 6 April 2021 8:04 PM GMT (Updated: 6 April 2021 8:04 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்தது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்தது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

கலெக்டர் ஓட்டு போட்டார்

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலையில் ஓட்டு போட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளை கண்டறிவதற்காக இணையதள செயலி தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூகுள் மேப் உடன் இணைக்கப்பட்டு உள்ளதால் வாக்காளர்கள் எளிதாக வாக்குச்சாவடியை கண்டறிந்து வாக்களித்து வருகிறார்கள்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி மற்ற 10 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆதாரத்தை வைத்து ஓட்டு போடலாம். வாக்குப்பதிவு எந்திரங்கள் சில இடங்களில் பழுது ஏற்பட்டதாக கூறினார்கள். இதனால் எந்த தாமதமும் ஏற்படவில்லை. தொகுதிக்கு 2 என்ஜினீயர்கள் உள்ளனர். அவர்கள் பழுது ஏற்பட்டால் உடனே சம்பவ இடத்திற்கு சென்று எந்திரங்களை சரி செய்கிறார்கள். இதனால் எந்த தாமதமும் ஏற்படாது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இருந்தாலும் வாக்குப்பதிவு நேரம் 7 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அனைவரும் வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் அங்கு போலீசார் எப்படி பணியாற்றுகிறார்கள்? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
நெல்லை மாநகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பழங்களை வழங்கினார். போலீசார் பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Next Story