மூதாட்டி உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு: விவசாயி குழிக்குள் இறங்கி போராட்டம் தளி அருகே பரபரப்பு


மூதாட்டி உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு: விவசாயி குழிக்குள் இறங்கி போராட்டம்  தளி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2021 2:06 AM GMT (Updated: 7 April 2021 2:06 AM GMT)

தளி அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தோண்டிய குழிக்குள் இறங்கி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தோண்டிய குழிக்குள் இறங்கி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 மூதாட்டி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளியை சேர்ந்தவர் வீரபத்திராரெட்டி. இவருடைய மனைவி அக்கையம்மாள் (வயது 75). அவர் தனது மகள் ஊரான நாகசந்திரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஊர் பொதுமக்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் குழி தோண்டினர். 
அப்போது அந்த இடம் தனது பட்டா நிலம் என கூறி அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் ரவிக்குமார் (29), விஜயகுமார் (27) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஊர் பொதுமக்கள் காலம், காலமாக இந்த பகுதியில் தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
குழிக்குள் இறங்கி போராட்டம்
அப்போது திடீரென அந்த இடம்  தனது பட்டா நிலம் என்று கூறி விவசாயி, மூதாட்டியை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி  போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவர் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  நிலத்தை அளந்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய தற்போது ஏரிக்கரையில் இடம் ஒதுக்கி தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் ஏரிக்கரையில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர்.

Next Story