வால்பாறையில் கடும் வறட்சி வெயிலின் தாக்கம் 95 டிகிரியாக உயர்வு


வால்பாறையில் கடும் வறட்சி வெயிலின் தாக்கம் 95 டிகிரியாக உயர்வு
x
தினத்தந்தி 7 April 2021 4:21 PM GMT (Updated: 7 April 2021 4:21 PM GMT)

வால்பாறையில் கடும் வறட்சி காரணமாக வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. வெயிலின் தாக்கம் 95 டிகிரியாக உயர்ந்தது.

வால்பாறை

வால்பாறையில் கடும் வறட்சி காரணமாக வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. வெயிலின் தாக்கம் 95 டிகிரியாக உயர்ந்தது. 

வால்பாறை 

மலைப்பிரதேசமான வால்பாறையில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. இங்கு குளு குளு சீசன் இருப்பதால் கோடை காலத்தில் இங்கு வந்து செல்லும சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 

இங்கு சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, சோலையார் அணை, நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சி முனை, 9-வது கொண்டை ஊசி காட்சி முனை, படகு இல்லம் என்று பல சுற்றுலா மையங்கள் உள்ளன. 

இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாகவே இருக்கும்.

சுற்றுலா பயணிகள் 

ஆனால் தற்போது கடும் வெயில் இருக்கிறது. மாலை 5.30 மணி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. இதன் காரணமாக கருமலை ஆறு உள்பட ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு காட்சியளிக்கிறது. 

முக்கிய சுற்றுலா மையமான சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு ஆகியவை வறண்டு விட்டன. 

சோலையார் அணையின் நீர்மட்டமும் 1 அடியாக உள்ளது. இதன் காரணமாக இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்து விட்டது. எனவே இங்குள்ள படகு இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

இது குறித்து வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

வெயிலின் தாக்கம் 

வால்பாறையில் மார்ச் மாதத்தில் கோடை மழை தொடங்கி விடும். ஏப்ரல் மாதம் தொடங்கும்போது வெயிலின் தாக்கம் இருந்தாலும் மழை பெய்யும் என்பதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. 

ஆனால் இந்த ஆண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. 2 நாட்கள் மட்டுமே பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. 

பகல் நேரத்தில்  வெயிலின் அளவு 95 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதன் காரணமாக இரவு நேரத்திலும் வெப்பம் இருக்கிறது. மலைப்பிரதேசம் போன்று இல்லாமல் சமவெளி பகுதியில் இருக்கும் காலநிலையே நிலவி வருகிறது. 

படகு இல்லம் வெறிச்சோடியது 

 எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு வெப்பம் இருப்பதால் தேயிலை செடிகள் கருக தொடங்கிவிட்டது. இதனால் தேயிலை உற்பத்தியும் குறைந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் வராததால் நகராட்சி நிர்வாகத்தின் படகு இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது.

அங்குள்ள படகுகள் எல்லாம் காய்ந்த வண்ணம் இருக்கிறது. வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் நகர் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துவிட்டது. 

மழை பெய்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறையும். எனவே மழையை எதிர்பார்த்து நாங்கள் காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story