பொள்ளாச்சி வால்பாறை தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது


பொள்ளாச்சி வால்பாறை தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது
x
தினத்தந்தி 7 April 2021 4:30 PM GMT (Updated: 7 April 2021 4:30 PM GMT)

கடந்த சட்டமன்ற தேர்தலை விட பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது.

பொள்ளாச்சி

கடந்த சட்டமன்ற தேர்தலை விட பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வால்பாறை தொகுதியில் வாக்குப்பதிவு குறைந்து உள்ளது. அதே நேரத்தில் பொள்ளாச்சி தொகுதியிலும்  சற்று குறைந்தது.

வால்பாறையில் குறைந்தது

வால்பாறை தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 705 ஆகும். இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 824 பேர் தேர்தலில் வாக்களித்தனர். அதன்படி 72.16 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 479 ஆகும். இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 917 பேர் தேர்தலில் வாக்களித்து உள்ளனர். 

அதாவது ஆண்கள் 70 ஆயிரத்து 767 பேரும், பெண்கள் 73 ஆயிரத்து 144 பேரும், மற்றவை 4 பேரும் அடங்குவர். தேர்தலில் 70.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பொள்ளாச்சி 

இதேபோன்று பொள்ளாச்சி தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின்போது 2 லட்சத்து 16 ஆயிரத்து 972 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். 

இது 77.70 சதவீதம் ஆகும். இந்த தேர்தலில் ஆண்கள் 86 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 88 ஆயிரத்து 734 பேரும், மற்றவை 5 பேரும் சேர்த்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 596 பேர் வாக்களித்து உள்ளனர்.

 இது  77.34 சதவீதம் ஆகும். இதனால் கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு வாக்குப்பதிவு சற்று குறைந்து உள்ளது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கொரோனா பீதி

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பீதி காரணமாக வயதானவர்கள் யாரும் வாக்குப்பதிவு செய்ய வரவில்லை. வால்பாறை தொகுதியில் மலைப்பகுதியில் வசிக்கும் நபர்கள் மாற்று தொழில், வேலை தேடி சமவெளி பகுதிக்கு வந்து விட்டனர். 

வெளியூருக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பவில்லை. இதுவும் தேர்தலில் வாக்குப்பதிவு குறைவதற்கு முக்கிய காரணமாகும்.

இதற்கிடையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் சிலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. 

எனவே வருகிற தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க முன்கூட்டியே உரிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். வாக்காளர்களும் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு முன் வர வேண்டும். 

அப்போது தான் தேர்தலில் 100 சதவீத வாக்கை பதிவு செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story