கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2021 5:15 PM GMT (Updated: 7 April 2021 5:15 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பான முதுநிலை படிக்கும் மாணவர்கள் 150 பேர் உள்ளனர். 

இவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் மருத்துவ கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தினமும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள்.

 அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முதுகலை மருத்துவ மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்படும் மருத்துவ மாணவர்களுக்கு போதிய உணவு வசதி, பணி முடிந்ததும் தனிமைப்படுத்துவதற்கு அறை உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு நேற்று காலை பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

உணவு வழங்குவது நிறுத்தம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களில் மூளை, இதயம் தொடர்பான பாதிப்பு உள்பட முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்புக்காக அனுமதிக்கப்படுவோருக்கு வழங்குவதற்கு போதிய அளவு மருந்துகள் இல்லை. 

இதனால் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதை கேட்டால் அரசு நிதி ஒதுக்காததால் மருந்துகள் வரவில்லை என்கிறார்கள்.மேலும் கொரோனா பணியில் ஈடுபடும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை உணவு வழங்கப்பட்டு வந்தது.

 அத்துடன் தனிமைப்படுத்திக்கொள்ள தனியார் ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா குறைந்ததால் தனிமைப்படுத்தவும் இல்லை. கொரோனா பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது. 

தற்போது கொரோனா வைரஸ் அதிகரிக்கும்பட்சத்தில் விடுதியில் இருந்து உணவு எடுத்து வந்து சாப்பிட சொல்கிறார்கள். கொரோனா வார்டில் பணி செய்துவிட்டு விடுதிக்கு சென்றால் அங்கு உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

 ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் கொரோனா பணியில் ஈடுபட்டு விட்டு தனிமைப்படுத்துவதற்கு விடுதியிலேயே அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.

தொகுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை

முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பு ஊதியமாக  ரூ.37,500, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.39,500 என வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஊதியம் கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்தபோது பயிற்சி டாக்டர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அப்போது இருந்த டீன் அசோகன் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story