மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம்


மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம்
x
தினத்தந்தி 7 April 2021 6:13 PM GMT (Updated: 7 April 2021 6:40 PM GMT)

கூடலூர் அருகே மாட்டை அடித்துக்கொன்று புலி அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் கூடலூர் பகுதி உள்ளது. இதனால் அங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அம்பலமூலா அருகே உள்ள வண்டன்மூலா பகுதியை சேர்ந்த ஜோய் என்பவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் கட்டி வைக்கப்பட்டு இருந்த மாடுகள் திடீரென கத்தும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோய் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு ஒரு காளை மாட்டை புலி அடித்து கொன்று அட்டகாசம் செய்வது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து புலி தப்பி ஓடியது. உடனே வனத்துறையினருக்கு ஜோய் தகவல் கொடுத்தார். 

அதன்பேரில் அவர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த காளை மாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜோய் கோரிக்கை விடுத்தார். மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பின்னர் வனத்துறையினர் கூறும்போது, கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டம் கண்காணிக்கப்படும். மேலும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 ஊருக்குள் புகுந்து காளை மாட்டை புலி அடித்துக்கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story