சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்கிய மாடுபிடி வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்கிய மாடுபிடி வீரர்கள்
x
தினத்தந்தி 7 April 2021 7:09 PM GMT (Updated: 7 April 2021 7:09 PM GMT)

சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள்.

சிங்கம்புனரி,

சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள்.

மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் ஆண்டுதோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மஞ்சுவிரட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு இளவட்டு மஞ்சுவிரட்டு நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 மாதமாக சுமார் 120 ஏக்கர் பரப்பளவு காடு சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

800 காளைகள் 

இதையொட்டி கிராமத்தார் சார்பில் சந்திவீரன்கூடம் கோவில் தொழுவத்தில் இருந்து ஜவுளி எடுத்து வரப்பட்டு வாடி வாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாடிவாசலில் இருந்து சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு கோவில்கள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 
இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் கலந்து கொண்டன. சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள். இந்த மஞ்சுவிரட்டை பார்க்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

பரிசு

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 30 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Next Story