திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது 75 எந்திரங்கள், கருவிகள் பழுது


திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது 75 எந்திரங்கள், கருவிகள் பழுது
x
தினத்தந்தி 7 April 2021 7:12 PM GMT (Updated: 7 April 2021 7:12 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது 75 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுதடைந்தன.


திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது 75 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுதடைந்தன.

எந்திரங்களில் கோளாறு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 23 லட்சத்து 38 ஆயிரத்து 745-ல் 73.55 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதேபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான விவிபேட் கருவிகளும் சரியாக இயங்காததால் பிரச்சினை ஏற்பட்டது.

75 எந்திரங்கள் பழுது

11 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. 28 வாக்குச்சாவடிகளில் கட்டுப்பாட்டு கருவிகளும், 36 வாக்குச்சாவடிகளில் விவிபேட் கருவிகளும் பழுதடைந்து இயங்கவில்லை. இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடிகளில் அரைமணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டல பறக்கும் படை அதிகாரிகள் உடனடியாக அந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட கருவிகளை புதிதாக கொண்டு சென்று பழுதடைந்தவற்றை உடனடியாக மாற்றினார்கள். இதன் காரணமாக எந்த ஒரு வாக்குச்சாவடியில் பெரிய அளவில் பிரச்சினைகள் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story