தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைப்பு


தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 7:47 PM GMT (Updated: 7 April 2021 7:47 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைத்தனர்.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் உள்ள மொத்தம் 1,884 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகள் விடிய விடிய நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையம்

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களின்போது, குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி கட்டிடத்தில்தான் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலுக்கு புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக தென்காசியை அடுத்த கொடிக்குறிச்சி யூ.எஸ்.பி. கல்வி குழும வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் இங்கேயே வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த மையத்திற்கு 5 தொகுதிகளில் இருந்தும் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டன. பின்னர் இந்த அறைகளை பூட்டி, அவற்றிற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைத்தனர்.

பலத்த பாதுகாப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளின் முன்பாக, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயில், அங்குள்ள சீல் வைக்கப்பட்ட அறைகள், வாக்கு எண்ணப்படும் இடங்கள் உள்ளிட்ட அந்த வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்திலேயே வேட்பாளர்களின் முகவர்களும் தங்கியிருந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story