வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 8:32 PM GMT (Updated: 9 April 2021 12:20 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மாவட்டத்தில் மொத்தம் 69.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் தேவிபட்டினம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு சம்பந்தப்பட்ட தேர்தல் மண்டல குழு அலுவலர்கள் மூலமாக காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த எந்திரங்கள் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் சொராப் பாபு, விசோப்
கென்யே, அனுரக் வர்மா மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டது. 

3 அடுக்கு பாதுகாப்பு 

இதன்பின்னர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விடிய விடிய நேரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியே 4 பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கண்காணிப்பு கேமராக்கள் 

அதேபோல, தேர்தல் வாக்கு எண்ணும் மைய வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை பிரிவினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தீ விபத்தை தடுக்க கூடிய தானியங்கி சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராமநாதபுரம் சுகபுத்ரா, பரமக்குடி தங்கவேல், திருவாடானை மரகதநாதன், முதுகுளத்தூர் மணிமாறன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் உடன் இருந்தனர்.

Next Story