புதுச்சேரியில் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ அறிவிப்பு; வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு


புதுச்சேரியில் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ அறிவிப்பு; வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 April 2021 6:15 AM GMT (Updated: 8 April 2021 6:15 AM GMT)

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பயன் படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

வாக்குப்பதிவு
இந்த சட்டமன்ற தேர்தலுக்காக புதுச்சேரி முழுவதும் 1558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் 1,558 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரி முழுவதும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பதிவு குறித்த விவரங்களை தேர்தல் துறை அதிகாரிகள் சேகரித்து வந்தனர். இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ராஜ்பவன் தொகுதியில் 72.68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

6 வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் புடை சூழ நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக்கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக், அரசு மகளிர் பாலிடெக்னிக் ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகள் மூடப்பட்டன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் 
பொருத்தப்பட்டுள்ளன.காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாகேவில் ஜவகர்லால் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் சிறு சிவில் மையம் மாநாட்டு மண்டபம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி ஏந்திய போலீசார்
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் சட்டம்-ஒழுங்கு போலீசாரும், அதைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் அதிரடி மற்றும் ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, புதுச்சேரி துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர், வெளி மாநில துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர் ஒருவர் என வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு தலா 3 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கண்காணிப்பு கேமரா
போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி பகுதியில் நடமாட யாருக்கும் அனுமதியில்லை.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணும் தேதியான மே 2-ந்தேதி அந்த அறைகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்படுகின்றன. அவை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Next Story