கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றும் முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு போதிய உணவு வசதி செய்யப்படவில்லை. பணி முடிந்ததும் தனிமைப்படுத்திக் கொள்ளும் அறை வசதி ஏற்படுத்தப்பட வில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், நேற்று 2-வது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் எங்களுக்கு போதிய உணவு மற்றும் தனிமைப்படுத்தும் அறைகள் செய்து கொடுக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் மூளை பாதிப்பு, சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்புகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு போதிய மருந்து மாத்திரைகள் இல்லை.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.