தருமபுரியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை முதுமலை வனத்தில் விடப்பட்டது
தருமபுரியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது.
கூடலூர்
தருமபுரியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மயக்க ஊசி செலுத்தி பிடித்த காட்டு யானை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூர் பகுதியில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக அட்டகாசம் செய்தது. மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்த பலனும் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொண்டுவந்தனர்.
முன்னதாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த காட்டு யானையை முதுமலைக்கு கொண்டுவரும் தகவலறிந்த முதுமலை கூடலூர் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதுமலையில் விடப்பட்டது
இதனால் காட்டு யானையை கொண்டு வரும் தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. தொடர்ந்து காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனச்சரகம் அசுவரமட்டம் பகுதியில் காட்டு யானையை விட்டால் கிராமப்புறங்களுக்கு செல்வது தடுக்கப்படும் என வன உயரதிகாரிகள் கருதினர்.
இதைத்தொடர்ந்து அசுவரமட்டம் வனத்தில் அதிகாலையில் காட்டு யானை விடப்பட்டது. மேலும் காட்டு யானையும் அப்பகுதியில் சற்று சோர்வுடன் நின்று வருகிறது.
இதனால் சோர்வை போக்க வனத்துறையினர் யானை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் பழங்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை காட்டு யானைக்கு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து காட்டு யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. இருப்பினும் வன ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
அதிகாரி விளக்கம்
இதனிடையே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை முதுமலையில் கொண்டு வந்து விடுவதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த 15 வயது ஆண் காட்டு யானை பிடிபட்டு முதுமலை அசுவரமட்டம் வனத்தில் விடப்பட்டுள்ளது.
இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்க 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய குட்டை அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து சூரிய மின் சக்தியில் செயல்படும் மோட்டார் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இதனால் காட்டு யானை வேறு இடங்களுக்கு செல்ல வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story