விழுப்புரம் அருகே பட்டப்பகலில் துணிகரம் போலீஸ்காரரின் மனைவியை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே பட்டப்பகலில் துணிகரம் போலீஸ்காரரின் மனைவியை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 April 2021 4:46 PM GMT (Updated: 8 April 2021 4:46 PM GMT)

விழுப்புரம் அருகே போலீஸ்காரரின் மனைவியை தாக்கி 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 


பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு

போலீஸ்காரரின் மனைவி

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவியரசி (வயது 31). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கவியரசி, 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் முத்துக்குமார், செஞ்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்டிவிட்டு மனைவி கவியரசியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கண்டியமடை கிராம சாலை அருகே சென்றபோது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ அட்டையை கவியரசி, வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை தனது கணவர் முத்துக்குமாரிடம் கூறினார்.

நகை பறிப்பு

உடனே முத்துக்குமார், தனது மனைவி கவியரசியையும், குழந்தையையும் அங்குள்ள ஒரு மரத்தின் நிழலில் நிற்க வைத்துவிட்டு மருத்துவ அட்டையை எடுத்து வருவதற்காக அங்கிருந்து முத்துக்குமார் வீட்டிற்கு சென்றார். அந்த சமயத்தில் விழுப்புரம் அடுத்த கண்டியமடை கிராம சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென கவியரசியின் குழந்தையை பிடித்துக்கொண்டு கவியரசியிடம் உனது கழுத்தில் இருக்கும் நகையை கழற்றி தரும்படி மிரட்டினார். ஆனால் கவியரசி, தான் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தான் வைத்திருந்த இரும்புக்கம்பியால் கவியரசியின் தலையில் தாக்கினார். இதில் அவர் மயங்கியதும் அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3.50 லட்சமாகும்.

வாலிபருக்கு வலைவீச்சு

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து வந்த முத்துக்குமார், தனது மனைவி கவியரசி தாக்கப்பட்டு மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கவியரசியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ்காரரின் மனைவியை தாக்கி நகையை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story