பெண் விடுதலை கட்சி தலைவர் கார் மீது கல்வீச்சு


பெண் விடுதலை கட்சி தலைவர் கார் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 8 April 2021 5:29 PM GMT (Updated: 8 April 2021 5:29 PM GMT)

பொள்ளாச்சியில் பெண் விடுதலை கட்சி தலைவர் கார் மீது கல்வீசி தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பெண் விடுதலை கட்சி தலைவர் கார் மீது கல்வீசி தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் விடுதலை கட்சி தலைவர் 

பெண் விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் சபரிமாலா. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 

ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தி.மு.க. வேட்பாளரான டாக்டர் வரதராஜனை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதனால் அவர் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள கட்சியின் மாநில  ஒருங்கிணைப்பாளர் சையது முகமது என்பவரது வீட்டில் தங்கி உள்ளார். 

கார் மீது கல்வீச்சு 

இந்த நிலையில் சையது முகமது வெளியில் சென்று நள்ளிரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்திற்குள் பயங்கர சத்தம் கேட்டது. 

பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது சபரிமாலா மற்றும் சையது முகமதுவுக்கு சொந்தமான கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

இதில் 2 கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து  சபரிமாலா, சையது முகமதுவிடம் விசாரணை நடத்தினர். 

கார்கள் மீது கல் வீசியது யார் என்பது தெரியவில்லை. 

போலீசார் விசாரணை 
இதுகுறித்து சபரிமாலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 

இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story