தேர்தல் விதி மீறி செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார்


தேர்தல் விதி மீறி செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 9 April 2021 12:44 AM IST (Updated: 9 April 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதி மீறி செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

திருச்சி, 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் பிரின்ஸ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீத்தாவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 6-4-2021 வாக்குப்பதிவு தினத்தன்று மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் அருகில் குமரன் பள்ளி வாக்குச்சாவடியில் எங்கள் கட்சியை சேர்ந்த அங்குராஜ், அழகுராஜ், சிவா ஆகியோர் வாக்குச்சாவடியில் பணியாற்றி வந்தனர். அன்று மதியம் 1 மணி அளவில் தி.மு.க.வை சேர்ந்த தெய்வசிகாமணி, அப்துல்லா ஆகியோர் அந்த வாக்குச்சாவடிக்கு சம்பந்தமில்லாத வேலுசாமி, மருதுபாண்டியன் மற்றும் 4 நபர்களை அழைத்து வந்தனர்.அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்ததால் அவர்கள் வாக்களிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அந்த நேரத்தில் மருதுபாண்டி, வேலுசாமி மற்றும் 2 பேர் எங்கள் கட்சிக்காரர்களை தாக்கினார்கள்.

நாங்கள் உடனடியாக அந்த நபர்களை பிடித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் தனிப்பிரிவு போலீஸ்காரர் சரவணன் ஆகியோரிடம் ஒப்படைத்தோம். புகார் மனு கொடுத்தோம். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மருதுபாண்டி உள்ளிட்ட 4 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அவர்கள் வாக்களிப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் துணை நின்றார்.

அதன் பின்னர் அன்று இரவு 7 மணி அளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சரவணன் ஆகியோர் சிவாவை கன்னத்தில் அறைந்து ஜீப்பில் ஏற்றி சென்று தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு அதன்மூலம் தேர்தல் விதிமுறைக்கு எதிராகவும் இருந்த சமயபுரம் இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு போலீஸ்காரர் சரவணன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story