திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த கொரோனா சிறப்பு வார்டு கூடுதலாக 450 படுக்கைகள் தயார்


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த கொரோனா சிறப்பு வார்டு கூடுதலாக 450 படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 8 April 2021 7:33 PM GMT (Updated: 8 April 2021 7:33 PM GMT)

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. கூடுதலாக 450 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. கூடுதலாக 450 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை

நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா, இந்தியாவையும் ஆட்டிப் படைத்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு 2020 மார்ச் 25-ந் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 8 மாதங்களுக்கும் மேலாக கோரோனா வைரஸ் தொற்று நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

திருச்சியிலும் அதிகரிப்பு

திருச்சி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் செயல்பட்டு வந்தது. படிப்படியாக குறைந்ததையொட்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறப்பு வார்டு மூடப்பட்டு அங்கு பல்நோக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.250 கட்டணம் வசூல் செய்து போடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 10, 20 என கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல மடங்கு அதிகரித்து விட்டது.
மீண்டும் செயல்பட தொடங்கியது

அதிகபட்சமாக 150 பேர் வரை தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் திருச்சி ஆஸ்பத்திரியில் மூடப்பட்டிருந்த சிறப்பு வார்டு தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. 

கொரோனா சிறப்பு வார்டில் தற்போது 250 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா கூறியதாவது:-

விழிப்புணர்வு அவசியம்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரிக்கத் தொடங்கி விட்டது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் கூடுதலாக 450 படுக்கைகள் நோயாளிகளுக்காக ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ளவிழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். முக கவசம் அணிவதையும், தனி நபர் இடைவெளியை பின்பற்றி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story