பொள்ளாச்சி பகுதியில் 468 நபருக்கு கொரோனா பரிசோதனை


பொள்ளாச்சி பகுதியில் 468 நபருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 April 2021 4:36 PM GMT (Updated: 9 April 2021 4:36 PM GMT)

ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பொள்ளாச்சி பகுதியில் 468 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பொள்ளாச்சி பகுதியில் 468 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நகராட்சி பகுதியில் 11 பேருக்கும், தெற்கு ஒன்றிய பகுதியில் கஞ்சம்பட்டி, சீலக்காம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டியில் தலா ஒருவருக்கும், பெரியாகவுண்டனூர், சின்னாம்பாளையம், வஞ்சியாபுரத்தில் தலா 2 பேருக்கும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வடக்கு ஒன்றியத்தில் ராமபட்டிணத்தில் ஒருவருக்கும், திப்பம்பட்டியில் ஒருவருக்கும், புளியம்பட்டியில் 3 பேருக்கும் சேர்த்து 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

ஆனைமலை ஒன்றியத்தில் 5 தொற்று உறுதியானது. பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பரிசோதனை

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தொற்று பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

மேலும் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அவர்களிடம் இருந்து சளி, ரத்தம், உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 98 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 91 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 205 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 74 பேருக்கும் சேர்த்து மொத்தம் 468 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

மேலும் தொற்று பாதித்த பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை பகுதியிலும் கொரோனா பரவல்  அதிகரித்து உள்ளது. அதன்படி சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை பகுதியில் தலா 5 பேர், போகம்பட்டி, செலக்கரிசல், வடவேடம்பட்டி, பாப்பம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேர், கந்தம்பாளையத்தில் 8 பேர், அப்பநாயக்கன்பட்டி, குமாரபாளையம் ஆகிய பகுதியில் தலா 4 பேர் என்று இதுவரை மொத்தம் 34 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 

இதையடுத்து அங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதுபோன்று நெகமம் அருகே உள்ள என்.சந்திராபுரத்தில் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்பட தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story