கொரோனாவுக்கு கோர்ட்டு ஊழியர் பலி


கொரோனாவுக்கு கோர்ட்டு ஊழியர் பலி
x
தினத்தந்தி 11 April 2021 12:53 AM IST (Updated: 11 April 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோர்ட்டு ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 வக்கீல்கள்- சட்டக்கல்லூரி மாணவர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்:

கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. பொது சுகாதாரத்துறை மூலம் சுமார் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 5 பேர் முதல் 8 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோர்ட்டு ஊழியர் சாவு
இந்நிலையில் வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 50). இவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இளநிலை கட்டளை பணியாளராக (ஜூனியர் அமீனா) வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் இவர் கண் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சைக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து பரிசோதனை செய்ததில் துரைராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துரைராஜுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் உள்ள ஓயாமாரி சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
வக்கீல்களுக்கு தொற்று
இதற்கிடையே பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த உடையார்பாளையத்தை சேர்ந்த பழனீஸ்வரன் (58) நேற்று காலை குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். பெரம்பலூர் கோர்ட்டு வளாகத்தில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கோர்ட்டு பணியாளர்கள் மற்றும் வக்கீல்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பெரம்பலூரில் வக்கீல்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பெரம்பலூர் ரோஸ்நகரை சேர்ந்த சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
பலி எண்ணிக்கை உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் 7 மாதங்களுக்கு பிறகு தற்போது கொரோனாவினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

Next Story