மேட்டுப்பாளையம் சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு


மேட்டுப்பாளையம் சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு
x
தினத்தந்தி 11 April 2021 4:36 PM GMT (Updated: 11 April 2021 4:36 PM GMT)

மேட்டுப்பாளையம் சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்தது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்தது. 

வாழைத்தார் சந்தை 

மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகிறார்கள். 

எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளை யம்-அன்னூர் ரோட்டில் உள்ள காரமடை 4 ரோடு பிரிவில் வாழைத்தார் சந்தை உள்ளது. 

இந்த சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் செயல்பட்டு வருகிறது.

 கடந்த 7-ந் தேதி நடந்த சந்தைக்கு 2,500-க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக வந்து இருந்தன. 

இங்கு நேந்திரன் கிலோ ரூ.18, கதளி ரூ.20, பூவன் (ஒரு தார்) ரூ.300, ரஸ்தாளி ரூ.350, செவ்வாழை ரூ.550, சாம்பல் வாழை ரூ.500-க்கு விற்பனையானது. 

விலை உயர்வு 

இந்த நிலையில்  சந்தைக்கு மேட்டுப்பாளையம், அன்னூர், அவினாசி, புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3,500 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். 

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டம் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஏலத்துக்கு வந்து இருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு வருடபிறப்பு பண்டிகையையொட்டி வாழைத்தார் விலை அதிகரித்து காணப்பட்டது. 

செவ்வாழை 

இந்த ஏலத்தில் கதளி கிலோ ரூ.18 முதல் ரூ.25 வரை, நேந்திரன் ரூ.35, பூவன் (ஒரு தார்) ரூ.200 முதல் ரூ.500 வரை, ரஸ்தாளி ரூ.150 முதல் ரூ.300, செவ்வாழை ரூ.150 முதல் ரூ.750, சாம்பல் வாழை ரூ.525 வரை விற்பனையானது. 

தற்போது வாழைத்தார் சீசன் இல்லாததால் சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்து இருந்தது. வருகிற ஜூன் மாதம் சீசன் தொடங்குவதால் அந்த மாதத்தில் வாழைத்தார் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story