தாளவாடி மலைப்பகுதியில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை


தாளவாடி மலைப்பகுதியில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 11 April 2021 9:18 PM GMT (Updated: 11 April 2021 9:18 PM GMT)

தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தக்காளி
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி மலைப்பகுதி. இதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இது தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரைதான் விலை கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பலர் தக்காளியை பறித்து குப்பையில் கொட்டியுள்ளார்கள்.
விலை வீழ்ச்சி
இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:-
தக்காளி 3 மாத பயிராகும். இதில் நாற்று நடுதல், களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கே ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகம் என வியாபாரிகள் காரணம் கூறி தக்காளியை குறைவான விலைக்கு கேட்கின்றனர். இதனால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாக பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருகிறோம். சிலர் அப்படியே செடியில் பறிக்காமல் விட்டுவிடுகிறோம். விவசாயத்தையே நம்பி இருப்பதால் கடனாளியாக உள்ளோம்.
இவ்வாறு விவசாயிகள் வேதனை தெரிவித்தார்கள்.

Next Story