முண்டியம்பாக்கத்தில் வங்கி மேலாளர் உள்பட 2 பேருக்கு கொரோனா
முண்டியம்பாக்கத்தில் வங்கி மேலாளர் உள்பட 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 15,750-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,400-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 250-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமி நாசினி தெளிப்பு
இந்த நிலையில் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த மேலாளர் மற்றும் உதவி மேலாளருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் பிரேமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், முபாரக்அலிபேக், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் கொண்ட குழுவினர் வங்கிக்கு வந்து, ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தனர். அதன்பிறகு வங்கியில் பணிபுரிந்த 6 ஊழியர்கள் மற்றும் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சுகாதார நடவடிக்கை காரணமாக நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை வங்கி மூடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story