சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 12 April 2021 4:31 PM GMT (Updated: 12 April 2021 4:31 PM GMT)

சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கவேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட சங்கரதாஸ் சுவாமிகள் மேடை நாடக கலைஞர்கள் நலச்சங்கத்தினர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா நோய் பாதிப்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முதன்மையாக பாதிக்கப்பட்ட தொழில் எங்களது கலைத்தொழில். கடந்த வருடம் தொழில் செய்யும் காலங்களின்போது ஏற்பட்ட கொரோனா பாதிப்பு எங்கள் அனைவரையும் நிலைகுலைய செய்து விட்டது.
தற்போது ஒரு வருடம் கழித்து அக்கட்டுப்பாடுகள் நீங்கி மீண்டும் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் உடனடியாக மறுபடியும் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் எங்களை போன்ற கலைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்காததால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேடை நாடக கலைஞர்கள் 4 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

எனவே எங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், அரசின் கட்டுப்பாடுகளில் நிகழ்ச்சி நடத்த ஏதுவாக அமையும் வகையில் தளர்வுகள் வழங்கியும் உத்தரவிட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டால் பேரிடர் நிவாரணமாக மேடை நாடக கலைஞர்கள் அனைவருக்கும் அரசு, மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அனுமதி கேட்டு...

இதேபோல் விழுப்புரம் மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 10-ந் தேதி முதல் கொரோனா தடை காலமாக கோவில் திருவிழாக்கள் நடத்தவோ, அங்கு தெருக்கூத்து, நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், விடுதிகள், பூங்கா, உணவகம் உள்ளிட்டவை 50 சதவீத பேருடன் இயங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள சிறிய கோவில்களில் திருவிழா மற்றும் தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகளை 50 பேர் முதல் 100 பேர் மட்டும்தான் பார்க்க கூடுவார்கள். எனவே தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கனிவோடு நினைத்தும் கடந்த ஆண்டினை போன்று கலைஞர்களின் பட்டினி சாவு இந்த ஆண்டும் தொடராமல் இருக்க சமூக இடைவெளியோடு தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

Next Story